என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணம் மோசடி"
- பாங்கூ 2.3 மில்லியனுக்கும் அதிகமான கமிஷன் ஏஜெண்டுகளை பட்டியலிட்டார்.
- லோதா குழுவின் இணையதளத்தின்படி, இதுவரை ரூ.19,000 வரை முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
5.5 கோடி முதலீட்டாளர்களை ஏமாற்றி 45,000 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டில் பியர்ல்ஸ் குழுமத்தின் உரிமையாளர் நிர்மல் சிங் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலாவை சேர்ந்த பாங்கூ, இளம் வயதில் பால் விற்று அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். 1970-ல் கொல்கத்தாவுக்கு இடம் பெயர்ந்த அவர் ஒரு சிட்பண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தார். 1980-ல் தனது சொந்த தொழிலை தொடங்குவதற்கு முன், முதலீட்டாளர் மோசடியில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
1996-ம் ஆண்டு வருமான வரித்துறை விசாரணையின் காரணமாக பாங்கூவின் பியர்ல்ஸ் கோல்டன் ஃபாரஸ்ட் (பிஜிஎஃப்) நிறுவனம் மூடப்படுவதற்கு முன்பே கோடிக்கணக்கில் குவித்தது.
பின்னர் பாங்கூ பியர்ல்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட், ஏஆர்எஸ்எஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஜெயின் இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகியவற்றை தொடங்கினார். ஆனால் இந்த முறை புகார்கள் சிபிஐ-க்கு சென்றன.
ஆனால் அதற்குள் பாங்கூ 2.3 மில்லியனுக்கும் அதிகமான கமிஷன் ஏஜெண்டுகளை பட்டியலிட்டார். இதில் 1,700-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளும் அடங்குவர். அவர்கள் முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்காக மாதாந்திர கமிஷன்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்றனர்.
2010, 2011, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஷிரோமணி அகாலி தளம் தலைமையிலான பஞ்சாப் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக கபடி கோப்பையின் முக்கிய ஸ்பான்சராக பியர்ல்ஸ் குழுமம் இருந்தது.
2014-ம் ஆண்டு பிப். 19 அன்று, பியர்ல்ஸ் குழுமத்தின் அப்போதைய தலைவர் நிர்மல் சிங் பாங்கூ மற்றும் பிற இயக்குநர்கள் அல்லது விளம்பரதாரர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது மற்றும் முதலீட்டாளர்களை ஏமாற்றுவதற்காக குரூப் போலி நில ஒதுக்கீடு கடிதங்களை வழங்கி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூலித்ததை வெளிப்படுத்தியது. பாங்கூ 2016-ல் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு, பியர்ல்ஸ் குழுமத்தின் சொத்துக்களை விற்பதன் மூலம் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் ஆர்.எம். லோதா குழுவை அமைத்தது.
லோதா குழுவின் இணையதளத்தின்படி, இதுவரை ரூ.19,000 வரை முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் முயற்சித்த நேரத்தில், நீதிமன்றத்தின் தடையையும் மீறி 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பியர்ல்ஸ் குழுமத்தால் சட்டவிரோதமாக விற்கப்பட்டதை பஞ்சாப் காவல்துறை வெளிப்படுத்தியது. பணத்தின் கணிசமான பகுதி ஷெல் நிறுவனங்கள் மூலமாகவும் திருப்பிவிடப்பட்டு, ஆஸ்திரேலிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு பஞ்சாப் விஜிலென்ஸ் பாங்கூவின் மனைவி பிரேம் கவுரை இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கைது செய்தது.
பியர்ல்ஸ் குழுமத்தின் சொத்துக்களை திசைதிருப்பியதாகவும், சொத்துகளை விற்பனைக்கு மாற்றுவதற்கு நெருங்கிய உறவினரை பரிந்துரைத்ததன் மூலம் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.
- கும்பலின் தலைவன் அசாம்கானை போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைன் மோசடி கும்பல் ரூ.17 லட்சத்து 71 ஆயிரத்து பெற்று ஏமாற்றியது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெங்களூருவில் தங்கியிருந்த வடமாநில கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த கும்பலை கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் போல் மாறு வேடத்தில் சென்று சுற்றி வளைத்து 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுபம் ஷர்மா (வயது 29), நிரஜ்சூர்ஜார்(29), உத்தர காண்டை சேர்ந்த ராஜ் கவுண்ட்(28) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசாம்கான் தலைவனாக கொண்டு புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து 3,400 பேரிடம் சுமார் ரூ.200 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஒரு மாதத்திற்கு ரூ.6 கோடி என இலக்கு வைத்து அவர்கள் வேலை தேடும் இளைஞர்களிடம் பணம் பறித்துள்ளனர்.
இந்த நிலையில் கைதானவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய செல்போன், லேப்-டாப் ஆகியவற்றை ஆய்வு செய்த போது இதில் ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.
ஏற்கனவே 3,400 பேரிடம் மோசடி செய்த அந்த கும்பல் மேலும் 360 பேரை தங்கள் வலையில் வீழ்த்தி பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் மாநில வாரியாக ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களின் விவரங்களை சைபர் கிரைம் போலீசார் தயார் செய்து வருகிறார்கள். அந்த பட்டியலை அந்தந்த மாநிலங்களை சேர்ந்த போலீசாருக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த பெரும் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கும்பலின் தலைவன் அசாம்கானை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த மோசடி கும்பல் தலைவன் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி கொள்வதால் அவனை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக உள்ளது. எனினும் ஓரிரு நாளில் அவன் புதுச்சேரி போலீசாரிடம் சிக்கி கொள்வான் என்று சைபர் கிரைம் போலீசார் உறுதியாக சொல்கிறார்கள்.
- பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது.
- போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26) இவர் டிப்ளமோ கேட்ரிங் படித்து விட்டு,புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
இவர் வேலைபார்க்கும் ஓட்டல் மூலம் அறிமுகமான புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த மிலன் அருள்மணி (46) என்பவர் பாலமுருகனுக்கு பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றுதருவதாக கூறி அவரிடம் இருந்து முன்பணமாக ரூ.10 ஆயிரம் பெற்றார்.
பின்னர் படிப்படியாக பள்ளி ஒரிஜினல் சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்ளுடன் மொத்தம் ரூ.1¼ லட்சம் பணத்தை கடந்த பிப்ரவரி மாதம் மிலன் அருள்மணி வாங்கினார்.
அதனை அடுத்து பாலமுருகன் வீட்டிற்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழ் வந்தது. அந்த சான்றிதழை பாலமுருகன் எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூலம் சரிபார்த்தார். அப்போது அது போலி சான்றிதழ் என தெரியவந்தது. மிலன் அருள்மணி பிரான்ஸ் குடியுரிமை சான்றிதழை போலியாக தயாரித்து தபாலில் பாலமுருகனுக்கு அனுப்பியது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சிடைந்த பாலமுருகன் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மிலன் அருள்மணியை தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மிலன் அருள்மணியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- முருகன் என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.
- மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
நெல்லை:
பாளையங்கோட்டை, சீவலப்பேரி ரோட்டில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டேனியல் சுந்தர் (வயது 35) என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இந்த நிறுவனத்திற்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்ட சுண்டக்குறிச்சி மேல தெருவை சேர்ந்த முருகன் (29) என்பவர் வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை தனது வீட்டில் இறக்குமாறு கூறியுள்ளார்.
அதன்பேரில் டேனியல் சுந்தர், முருகனுடைய வீட்டில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளை இறக்கி விட்டு அதற்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது முருகன் உங்கள் நிறுவனத்திற்கு ஏற்கனவே பணத்தை கூகுல்-பே மூலம் அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து டேனியல் சுந்தர் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் எதுவும் நிறுவனத்திற்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மானூர் வட்ட இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில், சென்னை, கொராட்டூர், பாலாஜி நகர், காமக்குடி தெருவை சேர்ந்த விக்னேஷ் (30), திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பைசூர் ரகுமான் (34) ஆகிய இருவரும் டேனியல் சுந்தரிடம், முருகன் போல பேசி கட்டுமான பொருட்களை வாங்கியதும், முருகனிடம், டேனியல் சுந்தர் பேசுவதாக கூறி பொருட் களுக்குரிய பணத்தை கூகுள்-பே மூலம் பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து விக்னேஷ், பைசூர் ரகுமான் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- கிருஷ்ணிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
- வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பரத்குமார், 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.
கரூர்:
சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சவுக்கு சங்கர் நடத்தும் யூ-டியூப் சேனலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், கரூரில் பிரியாணி கடை நடத்தும் கிருஷ்ணன் என்பவருக்கும் ஆன்லைன் விளம்பரம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட இருவரும் பேசியுள்ளனர். அப்போது கிருஷ்ணனிடம் விக்னேஸ் ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து , கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்டையில், விக்னேஷிடம் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விக்னேஷை கைது செய்த கரூர் நகர போலீசார். அவரை சிறையில் அடைத்தனர். இந்த, நிலையில், விக்னேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புழல் சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இருந்து வரும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று கரூர் குற்றவியல் நடுவர் பரத்குமார் முன்னிலையில் போலீசார் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரிடம் விசரணை நடத்த 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்குமாறு அனுமதி கேட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் பரத்குமார், 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து சவுக்கு சங்கரிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் போலீசாரிடம் பரபரப்பு தகவல்களை கூறியுள்ளார். மேலும் ரூ.7 லட்சம் மோசடி குறித்து தனக்கு தெரியாது என்றும், இதில் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் மறுத்துள்ளார். அதே வேளையில் இந்த வழக்கில் சில ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர்.
அதை அடிப்படையாக வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
- இணையதளம் மூலம் தன் விவரங்களை பதிவு செய்த அவர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் 46 வயது நபர். தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி ஒரு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது. அதில் ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
அதில், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு பணம் தேவைப்படும்போது அதை விற்றால் லாபத்துடன் உங்கள் முதலீட்டு தொகை உங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை நம்பி அந்த இணையதளம் மூலம் தன் விவரங்களை பதிவு செய்த அவர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது. இதையடுத்து அவர் தன்னிடமிருந்த 66 லட்சத்து, 87 ஆயிரத்து, 500 ரூபாயை அனுப்பினார். ஆனால் அதன்பின் அந்த இணையதள பக்கம் முடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தன்னை தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் எண்களை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வங்கி மூலம் மகளிர் சுய உதவி கடன்கள், விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதகடிப்பட்டு:
புதுச்சேரி திருபுவனையில் விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் சுமார் 11 கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 6,500 பேர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.
வங்கி மூலம் மகளிர் சுய உதவி கடன்கள், விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வங்கியில் உறுப்பினராக உள்ள கலித்தீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த முருகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வங்கி சார்பில் வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்து தகவல் பெற்றார்.
அதில் பெரும்பாலான நபர்கள் விவசாயிகளே இல்லாமல் கடன் பெற்றதும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் கையெழுத்து மற்றும் அரசு முத்திரைகள் இட்டு போலியாக சான்றிதழ்கள் பெறப்பட்டு அதன் மூலம் கடன் பெற்றது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் கலிதீர்த்தாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றும் ஜெயக்குமார் என்பவரும் 50 நபர்கள் மீது போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்து சுமார் ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து முருகன் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை மேற்கொண்டதில் போலியாக சான்றிதழ் கொடுத்து கடன் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி சான்றிதழ் கொடுத்து வங்கியில் ரூ.35 லட்சம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
- முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்திற்கான தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.
இதை விசாரித்த தீர்ப்பாயம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது.
எனவே டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
- சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார்.
- வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் சடகோபன் (வயது 48). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (42).
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஏலச்சீட்டு நடத்தினர். அதில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாபதி சேர்ந்து பணம் கட்டி வந்தார். இதேப்போல் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மேலும் பலரும் சேர்ந்து பணம் கட்டினர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்த பின்னரும் பலருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சடகோபன், விஜயா காலதாமதம் செய்து வந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார். பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சடகோபன், விஜயா தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.29 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்குபதிவு செய்து சடகோபன், விஜயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சடகோபனை புதுக்கோட்டை கிளை சிறையிலும், விஜயாவை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தார்.
- மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
- போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம்.
கோவை:
தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மூலம் பண பரிமாற்றம் போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.
ஆன்லைன் பணபரிமாற்றமானது முன்பைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
இதன் மூலம் பல வகைகளில் மோசடிகள் செய்து வந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
கோவை மாநகரில் பொருளாதார குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதை போலவே அண்மைக் காலமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.
அதன்படி மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுவார்கள்.
அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.
போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.
போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.
போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, இந்த கும்பல் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வடமாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.
மேலும் இந்த கும்பலின் மோசடியில் சிக்காமல் இருப்பது குறித்து போலீஸ் துறையின் சோஷியல் மீடியா செல் மூலம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
- பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
- வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.
சென்னை:
செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.
செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.
உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.
இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.
இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.
இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-
இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.
பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
- புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை, விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகைகள் வங்கிகள் மூலம் வழங்கப் படுகிறது.
வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
இதனால் வங்கிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் எடுக்கும் முறை உள்ளது. இந்த முறையில் பணம் எடுக்க ஏ.டி. எம்., கார்டு, வங்கி புத்தகம், ஆதார் எண், ஓ.டி.பி. தேவையில்லை. சிறிய ரேடியோ போன்ற வடிவில் கருவி இருக்கும்.
இந்த கருவியில் கைரேகையை பதிவு செய்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.
கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறையில் முதியோர், விதவை உள்ளிட்டோருக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து தரப்படுகிறது.
தற்போது இணைய வழி மோசடி கும்பல் கடந்த 4 நாட்களில், புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.
பொதுமக்கள் சிம்கார்டு வாங்கும் போது ஆதார் கார்டை புதுப்பிக்கும் போது, சொத்து வாங்க, விற்கும்போது பத்திர பதிவு அலுவலகத்தில் கைரேகை பதிவுகளை பயன்படுத்துவர். அந்த கைரேகை பதிவுகளை, அதே போன்ற கைரேகையை சிலிக்கான் பதிவு மூலம் பிரதி எடுத்து, ஒ.டி.பி., இன்றி வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை எடுக்கின்றனர்.
இந்த முறையில் பணம் எடுக்கும் மோசடியை தடுக்கும் முறையை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்